அஞ்செட்டி அருகே இறந்து கிடந்த ஆண் யானை: துப்பாக்கியால் சுடப்பட்டது அம்பலம்
அஞ்செட்டி அருகே 2 தினங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை, துப்பாக்கியால் சுடப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.;
மர்மமான முறையில் இறந்து கிடந்த யானை.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து விசாரணையில் பிரேத பரிசோதனையில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு வனத்துறையினர் தனியாக சிறப்புப் படைகளை அமைத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனக் காப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் கவிகார்த்திகா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை இறப்பு குறித்து விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவின் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்த யானையின் வயது சுமார் 23 வயது இருக்கும். இரண்டு தந்தங்களும் மீட்கப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை சிறப்பு தனிப்படை அமைத்து தேடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.