ராயக்கோட்டையில் கனமழை: வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி
ராயக்கோட்டையில் பெய்த கனமழையால் ஓட்டுவீடு இடிந்து விழுந்ததில், கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை புருஷப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வாணை(40). இவர்களுக்கு ஆறுமுகம்(22), முருகன்(13) என்ற மகன்களும், அபிநயா(19) என்ற மகளும் உள்ளனர். அபிநயாவிற்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராயக்கோட்டை பகுதியில் கனமழை பெய்தது. அப்போது தவமணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகன், அபிநயா வீட்டிற்கு சென்றிருந்துள்ளனர். கனமழையால் தவமணியின் ஓட்டு வீட்டின் சுவர் முற்றிலும் ஊறி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் இளங்கோ மற்றும் போலீசார், விசாரித்து தவமணி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் உடனடியாக வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மழையால் வீடு இடிந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.