இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம்
தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.ராமச்சந்திரனை ஆதரித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.;
தமிழ்நாட்டில், 20 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.ராமச்சந்திரனை ஆதரித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தளி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தளி உள்பட 20தொகுதிகளிலும் போட்டியிடுகிற பா.ஜனதா கட்சி, ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெற முடியாத அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும்.
தமிழகத்திற்கு துரோகம் விளைவித்த அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாத அ.தி.மு.க. அரசு அந்த செய்திகள் மக்களை சென்றடைய கூடாது என்பதற்காக இருட்டடிப்பு செய்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் திருவண்ணாமலையில் பிரசாரம் செய்த போது, அங்குள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். வருமான வரி சோதனை நடத்தி, பிரசாரத்தை தடுத்து வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. - பா.ஜனதா அரசுகள் நினைக்கிறார்கள். கல்யாண வீட்டில் சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா?
தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற போவது உறுதி. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு குடும்பத்திறகு ரூ.5 ஆயிரம் வழங்க தி.மு.க. கூட்டணியில் உள்ள நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் ஆட்சியாளர்கள் வழங்கவில்லை. இன்றைய தினம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நிறைவேற்றி தருவார். இவ்வாறு அவர் பேசினார்.