கெலமங்கலம் அருகே பஞ்., செயலர் மீது நடவடிக்கை கோரி மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பஞ்சாயத்து செயலாளரின் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சந்தனப்பள்ளி பஞ்சாயத்தில் மஞ்சுநாத் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பஞ்சாயத்து செயலாளர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இந்த பஞ்சாயத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குடிதண்ணீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அடிப்படை பிரச்சனைகளுக்கு வரும் நிதியை முறையாக செலவிடாமல் முறைகேடுகள் செய்து பல இலட்சம் ரூபாய் ஊழல்செய்துள்ளார் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சந்தனப்பள்ளி பஞ்சாயத்து ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் திம்மக்கா , சிக்கேபுரம் கிராமத்தில் வெங்கடராமைய்யா ஆகிய இருவருக்கும் 2016-2017 ஆண்டு பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ரூ.1.70 இலட்சம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கி பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதே போல் பஞ்சாயத்தில் இதே கால கட்டத்தில் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பெரும் பகுதியினருக்கு வழங்காமல் அதையும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊழல் முறைகேடு செய்துள்ள பஞ்சாயத்து செயலாளர் மஞ்சுநாத் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.