தேன்கனிக்கோட்டையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா பறிமுதல்
தேன்கனிக்கோட்டையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களான குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் கஞ்சா வாங்கி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை .காவல் துணை கண்காணிப்பாளர் கிருத்திகா தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சாவை வாங்கி விற்பவர்களின் விவரங்கள் சேகரித்தனர்.
நேற்று ஓடிசா மாநிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் வருவதை அறிந்து, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரி ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 300 கிலோ சுஞ்சாவை கைப்பற்றினர்.
மேலும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப ரெட்டி, ஹரிஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் ஆகிய மூன்று பேரை கைது லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, 300 கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா ஒரிசா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மிகவும் பயங்கரமான குற்றவாளிகள். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும். மேலும் கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.