தளி அருகே மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழப்பு : இருவர் படுகாயம்
தளி அருகே மண் சரிந்து இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; மேலும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சாமநத்தம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் செங்கல் சூளைகளுக்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளார். அங்கு, 10 அடிக்கு கீழ் வெள்ளை நிற கற்கள் உள்ளன. இந்த கற்களை பொடி செய்து கோலமாவு பயன்படுத்த ஆசைப்பட்ட சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகிய நான்கு பேர், இன்று கோலமாவு கல் எடுப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதற்காக, குழி தோண்டி கோலம் மாவு எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து, நான்கு பெண்களும் மண்ணில் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்து, ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஊர் பொதுமக்கள் உதவியுடன் மண்ணில் சிக்கி கொண்ட நான்கு பெண்களை, மண்ணை அகற்றி அவர்களை மீட்டு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2 பேரை மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.