வனத்துறையினர் ஜீப்பை துரத்திய ஒற்றையானை
தளி அருகே சாலையில் சுற்றித்திரிந்த யானையை வனத்துறையினர் விரட்ட சென்றபோது, ஆக்ரோஷம் அடைந்த ஒற்றையானை வனத்துறையினரின் ஜீப்பை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சூல குண்டா வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் யானை நேற்று காலை சூல குண்டா கிராமம் அருகே சாலையில் தனியாக சுற்றி திரிந்தது. அதைப்பார்த்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் யானையை விரட்ட சென்றனர் . அப்போது சாலையில் சுற்றி திறந்த ஒற்றை யானையை ஜீப்பில் இருந்தவாரே வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர். பட்டாசு வெடித்ததால் ஆவேசமடைந்த யானை ஆக்ரோஷத்துடன் வனத்துறையினரின் ஜீப்பை நோக்கி ஓடிவந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஜீப் டிரைவர் ஜீப்பை பின் நோக்கி வேகமாக இயக்கினார். யானை சிறிது தூரம் ஓடிவந்து அங்கேயே நின்றுவிட்டது. பின்னர் சற்று தொலைவு சென்று அங்கிருந்த பட்டாசு வெடித்த பின் சாலையில் இருந்த யானை மீண்டும் காட்டு பகுதிக்குள் சென்றது.