போக்குவரத்து விதிமீறல் - குமரியில் ஒரே நாளில் 2181 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடனும், வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும், மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களில், விதி மீறல்களில் ஈடுபட்ட, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.