குமரியில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் ஏமாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது குறைந்து வந்தாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1486 ஆக உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன, தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாள் முதல் இருந்துவரும் குளறுபடிகள் காரணமாகவும் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாகவும் மையங்கள் மற்றும் தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படுவது இல்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரை 90 முதல் 120 மையங்களில் நடைபெற்று வந்த சிறப்பு முகாம்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள 1 மையத்தில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
அதன்படி டதி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மையத்தில் 500 டோஸ் தடுப்பூசி போடப்படும் நிலையில் இது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சமூக இடைவெளி இன்றி கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதனிடையே காலை எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு முகாமிற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் 500 டோஸ் மட்டுமே இருப்பில் உள்ளதாக கூறி டோக்கன் கொடுத்ததால் பல மணி நேரமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.