மழை, தொற்று பாதிப்பு குறைய குமரி நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமரியில் மழை நிற்க வேண்டியும், நோய் தொற்று பாதிப்பு குறையவும் நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் பெருமளவு நீரின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. பல்வேறு இடங்களில் குளங்கள் கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது, சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மீண்டும் மழை பெய்தால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இரணியல் பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஒடுப்புரை நாகரம்மன் கோவிலில், மழை நிற்க வேண்டியும், நோய்தொற்று அகல வேண்டியும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மேலும், கோவிலில் உள்ள ஆலமரத்தில் உள்ள நாகங்களுக்கு நீரும் பாலும் நிவேத்தியம் செய்யப்பட்டது. காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த வழிபாடு மூலமாக, கேட்ட வரம் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த வழிபாடு மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.