ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வயது முதிர்ந்த தம்பதியினர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வயது முதிர்ந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள நாட்களில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று சனிக்கிழமை என்பதால் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வயது முதிர்ந்த தம்பதிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த சரஸ்வதி மற்றும் மருதப்பன் என்பது தெரிய வந்தது.
மேலும் மகன், மருமகள் மற்றும் பேரன்கள் தங்கள் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு தங்களை அடித்து விரட்டி கொலைமிரட்டல் விடுத்தனர், இது குறித்து பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாழ வழி இல்லாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தனர்.