ஈரோட்டில் 2,504 பயனாளிகளுக்கு ரூ.3.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

ஈரோட்டில் 2,504 பயனாளிகளுக்கு ரூ.3.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

Update: 2023-03-25 08:30 GMT

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 335 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 2169 மாணவியர்களுக்கு ரூ.43.38 லட்சம் மதிப்பிலான மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஆகியோர் முன்னிலையில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (சனிக்கிழமை) வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்புமிக்க திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக, மகளிர்க்கான இலவச பேருந்து பயண திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

அதில் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதனை அடிப்படையாகக் கொண்டு, 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் திருமணத்திற்கென அவர்களின் பெற்றோருக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டமானது தற்போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என பெயர் மாற்றம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


மேலும், பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகள் கல்வி பயிலுவதில் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர்கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மாற்றம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், இத்திட்டமானது, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கின்றது. இத்திட்டத்தில் பயன்பெற மாணவியர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மாணவியர்கள் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவியர்களுக்கு இத்திட்டம் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 4141 மாணவியர்களுக்கும், தற்போது இரண்டாம் கட்டமாக 2169 மாணவியர்களுக்கு ரூ.43,38,000 மதிப்பீட்டிலான என ஆகமொத்தம் 6310 மாணவியர்களுக்கு அவரவரது வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.1000/- செலுத்தப்பட்டு வருகிறது.


மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத்திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற 303 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.1,51,50,000/-, நிதியுதவியும், மற்றும் பத்தாம், 12-ம் வகுப்பு பயின்ற 32 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.8,00,000/- நிதியுதவியும் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.1,59,50,000/- மதிப்பீட்டில் திருமண மற்றும் 335 பயனாளிகளுக்கு ரூ.1,49,78,855/- மதிப்பீட்டில் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் என ரூ.3,09,28,855/- மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இன்றைய தினம் ரூ.3,52,66,855 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டுமேன அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.


தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022 - 23 ம் ஆண்டிற்கு 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு தொகையினையும் (முதல் பரிசு ரூ.25,000/-, இரண்டாம் பரிசு ரூ.20,000/-, மூன்றாம் பரிசு ரூ.15,000/-) மற்றும் பட்டு விவசாயிகளுக்கு நவீன புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்னை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 5 விவசாயிகளுக்கு தலா ரூ.52,500/- மதிப்பீட்டிலான 6 பொருட்கள் அடங்கிய உபகரணங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மரியாதைக்குரிய துணை செல்வராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சித்துறை) சிவநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News