ஈரோட்டில் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
ஈரோட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (சனிக்கிழமை) வழங்கினார்.
இவ்விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவு பெற்று மூன்றாவது ஆண்டை நோக்கி சிறப்புடன் செயல்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்று கல்லூரி படிப்பை சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சிக்காக சுமார் 85 திட்டங்களை வழங்கி உள்ளார்கள் அத்திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (சனிக்கிழமை) தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கும் விழா மற்றும் புதுமைப்பெண், நாள் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கிளின் கீழ், ஆணைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்திலுள்ள, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் ஆகிய வருவாய் வட்டங்களைச் சார்ந்த சுமார் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான மாதாந்திர உதவித்தொகை பெறுகின்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக 22,821 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/- வீதம் ரூ.133.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களாகிய தாங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.