அமைச்சர் உதயநிதிக்கு தில் இருக்கா..? சவால் விட்ட தமாகா இளைஞரணி யுவராஜா
38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி செங்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்க - அமைச்சர் உதயநிதிக்கு தில் இருக்கா? என தமாகா கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி செங்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்க அமைச்சர் உதயநிதிக்கு தில் இருக்கா? என தமாகா கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:-
தி.மு.கவினர் நடத்த இருக்கும் உண்ணாவிரதம் ஒரு போலி கபட நாடகம். “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் ஒன்று உண்டு. அந்த பாடலுக்கு முழு சொந்தக்காரர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர்.
பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்து என்று அறிவித்து இன்று வரை அதை மறைப்பதற்கு போடும் கபடநாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம். உண்மையில் இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி தேர்தலில் பொய் தகவல் கொடுப்போர் வெற்றி பெற்றாலும் பொய் என்று நிரூபணமானால் அவர்களுக்கு பதவி பறிபோய்விடும்.
அரசியலமைப்புச் சட்டமும், இந்திய நீதித்துறையும் கடந்தகாலங்களில் இதை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில் தி.மு.கவினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே இந்திய அரசியல் சாசனமுறைப்படி இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று த.மா.கா இளைஞரணி வலியுறுத்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடந்த தேர்தல் பரப்புரையில் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்தை தமிழக முதல்வர் போடுவார்கள் என உறுதியும், உத்தரவாதமும் கொடுத்தவர்.
அந்தத் தேர்தல் சமயத்தில் தமிழக மக்கள் நீட் தேர்வில் பல உயிர்களை பறி கொடுத்திருந்த சமயம் அது. அதனால், இந்த பொய்யான வாக்குறுதியை நம்பி பெரும்பாலான வாக்காளர்கள் தி.மு.க வுக்கு வாக்களித்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த அரசு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்பதை தமிழக மக்கள் முற்றிலுமாக உணர்ந்து இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
எனவே உண்ணாவிரதம் என்னும் கபடநாடகத்தை கைவிட்டு விடுவதே விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்துக்கு நல்லது. அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய கூட்டணிக் கட்சிகள் உட்பட 38 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா? என்று த.மா.கா இளைஞரணி கேட்டுக் கொள்ள விரும்புகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கு கையில் ரகசியம் இருப்பதாக விளையாட்டு அமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தீர்கள். தற்பொழுது மாணவ, மாணவியர்களின் உயிர்பலியை தடுப்பதற்காகவாது அந்த ரகசியத்தை கூறவேண்டுமென்று த.மா.கா இளைஞரணி கேட்டுக்கொள்கின்றது.
எனவே, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! இதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்பதை த.மா.கா இளைஞரணி இதன் மூலம் அறிவிக்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.