பெருந்துறை சிப்காட் பகுதியில் சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு நீட்டிப்பு..!

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குறித்த ஆய்வு விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-02 13:15 GMT

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பாலத்தொழுவு குளம் மாசடைவதாக வந்த புகாரின்பேரில், மாசுக் கட்டுப்பாடு வாரியத் துறை சிறப்பு அதிகாரிகள் குழுவினரின் ஆய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டம்,  பெருந்துறை மற்றும் ஈங்கூர் கிராமங்களில் சுமார் 2,709 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தற்பொழுது 157 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் தனி சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய 43 சாயத்தொழிற்சாலைகள் மற்றும் 9 உறுப்பினர் சாயத்தொழிற்சாலைகளைக் கொண்ட ஒரு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (டெக்ஸ்டைல்ஸ்) அடங்கும்.


இது தவிர 14 உறுப்பினர் தோல் தொழிற்சாலைகளுக்கான ஒரு பொது கழிவுநீர் நிலையம் 2021ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அதன் 14 உறுப்பினர் தோல் தொழிற்சாலைகளும் தற்சமயம் இயக்கத்தில் இல்லை. இந்நிலையில், சிப்காட் தொழிற்சலை மற்றும் பாலத்தொழுவு குளம் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகமானது பெருந்துறை சிப்காட்டில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் திடீர் ஆய்வு செய்ய தலா மூன்று அதிகாரிகளை கொண்ட மூன்று சிறப்புக்குழுக்களை அதிரடியாக அமைத்து கடந்த மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை மூன்று தினங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேற்குறிப்பிட்ட சிறப்பு அதிகாரிகள் உள்ளடக்கிய குழுக்களை மேலும் மூன்று தினங்களுக்கு நீட்டித்து வரும் 4, 5, 7ம் தேதிக்குள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வாரிய உத்தரவிற்கிணங்க சிறப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுக்கள் சிப்காட் வளாகம், அதனை ஒட்டியுள்ள நீர்நிலைகள் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News