கழிவுநீர் புகார் எதிரொலி; பெருந்துறை சிப்காட்டில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

பெருந்துறை சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும், மூன்று மாசுக்கட்டுப்பாடு வாரிய துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-08-31 01:00 GMT

பெருந்துறை சிப்காட்.

சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கசிவுநீரால் பாலத்தொழுவு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில், 3 மாசுக்கட்டுப்பாடு வாரிய துறை அதிகாரிகள் கொண்ட 3 சிறப்புக் குழுவினர் புதன்கிழமை (நேற்று) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் ஈங்கூர் கிராமங்களில் சுமார் 2709 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தற்பொழுது 157 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் தனி சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய 43 சாயத்தொழிற்சாலைகள் மற்றும் 9 உறுப்பினர் சாயத்தொழிற்சாலைகளைக் கொண்ட ஒரு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (டெக்ஸ்டைல்ஸ்) அடங்கும்.

இது தவிர 14 உறுப்பினர் தோல் தொழிற்சாலைகளுக்கான ஒரு பொது கழிவுநீர் நிலையம் 2021ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அதன் 14 உறுப்பினர் தோல் தொழிற்சாலைகளும் தற்சமயம் இயக்கத்தில் இல்லை.


சிப்காட் தொழிற்சாலை மற்றும் பாலத்தொழுவு குளம் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகமானது பெருந்துறை சிப்காட்டில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் திடீர் ஆய்வு செய்ய தலா மூன்று அதிகாரிகளை கொண்ட மூன்று சிறப்புக்குழுக்களை அதிரடியாக அமைத்து புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேற்று முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 01) நாளை வரை மூன்று தினங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News