அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.;
அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் அந்தந்த மாநில தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது லாரியில் வந்தவரிடம் ரூ.78 ஆயிரம் இருந்ததை அதி காரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து லாரியில் வந்தவரிடம் குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் ஹனூரை சேர்ந்த மஞ்சள் வியாபாரியான யோகேஷ் (வயது 29) என்பதும், அவர் மஞ்சள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரை சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிவேல் தலைமையிலான குழுவினர் நடத்திய வாகன சோதனையில், பெருந்துறை தொட்டியனூரை சேர்ந்த மக்காச்சோள வியாபாரியான பழனிச்சாமி (வயது 53) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்தியூர் அருகே மாநில எல்லையில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.