கர்நாடக மாநிலத்திற்கு அரிசி, பருப்பு கடத்திய ரேஷன் கடை விற்பனையாளர் கைது
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தனியார் பேருந்தில் அரிசி, பருப்பு கடத்திய ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.;
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தனியார் பேருந்தில் அரிசி, பருப்பு கடத்திய ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் தனியார் பேருந்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக, கடந்த,3ம் தேதி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம், உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார், ஆசனூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 16 மூட்டைகளில், 480 கிலோ ரேஷன் அரிசியும்,6 மூட்டைகளில், 180 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான துவரம் பருப்பையும் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், இப்பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது, அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த வரதராஜ் மகன் பிரபு என்பதும், இவர் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூர் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி,பருப்பினை பேருந்தில் ஏற்றி அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.