ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா

ஈரோட்டில் மாசு ஏற்படுத்தும் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-21 20:00 GMT

பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.

ஈரோட்டில் மாசு ஏற்படுத்தும் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், மூலக்கரை பகுதியில் சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவால், அப்பகுதியில் உள்ள கூரப்பாளையம், கதிரம்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பதாகவும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மாசடைவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்துள்ளனர்.


இந்நிலையில், மாசுபட்ட கழிவால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால், அந்த ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஆலையை ஆய்வு செய்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுகளை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுத்தமான காற்று, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற்சாலையால் ஏற்படும் பிரச்னை குறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி ஆகியோரிடம் பொதுமக்கள் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஈரோடு தாலுகா போலீசார் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News