அனைவரும் இணைந்து முயற்சிப்பது அவசியம்: மத்திய இணை அமைச்சர்..!
மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைவரும் முயற்சித்தால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வரா துடு தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வரா துடு தெரிவித்தார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை பவானி அருகே தொட்டிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் பெ.அழகேசன் வரவேற்றார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வரா துடு பேசியதாவது, மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் யாத்திரையில், மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்க அக்கறை காட்டுவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதன் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகிறது. ஆனால், மத்திய அரசின் திட்டம் என மாநில அரசுகள் சொல்வதில்லை. அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் 2024 ஆம் ஆண்டுக்குள் வழங்க ஜல்ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு 100 சதவீதம் நிதியினை மாநில அரசுக்கு வழங்கினாலும், மாநில அரசு அதிகாரிகள் பயனாளர்களிடம் ரூ.20 ஆயிரம் வரையில் பணம் பெறுவது வேதனைக்குரியது.
கடந்த 2023 நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரையில் நாடெங்கிலும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என இந்த யாத்திரை நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், வளர்ச்சி அடைந்த இந்தியாவாக உருவாகும்.
நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டான 2047ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவே, மகளிர், ஏழைகள், விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஏலாளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்சார்பு பாரதமாக மாற்ற சுயதொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் இளைஞர்கள், பெண்கள் வாழ்வில் உயர தொழில் கடன், மானியத்துடன் வழங்கப்படுகிறது.
மகளிர் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தொழில், பொருளாதாரத்தில் உயர வேண்டும். விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளது. இதனை அறிந்து கொண்டு விவசாயிகள் வருவாயை பெருக்கி, இரட்டிப்பாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
கொரோனா காலத்தில் நாட்டு மக்களைப் பாதுகாத்ததோடு, தேவைப்படும் நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி காப்பாற்றியது. பிறநாடுகள் வியக்கும் வகையிலும், அச்சப்படும் வகையிலும் இந்தியாவின் அறிவியல், ஆராய்ச்சியின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்றார்.
விவசாயிகளுக்கு கடன் அட்டை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 46 பேருக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் கலைவாணி விஜயகுமார் மற்றும் பல்வேறு துறைசார் அலுவலர்கள் பங்கேற்றனர்.