பிப்.4ல் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

ஈரோடு சோலாரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 4ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-01-20 13:00 GMT

திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் சோலார் புதிய பேருந்து நிலையம். 

ஈரோடு சோலாரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 4ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் பேருந்துகள் வந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கரூா், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்து செல்லும் பேருந்துகளுக்காக கரூா் சாலையில் சோலாரில் நவீன பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 24 ஏக்கரில் ரூ.63.50 கோடி மதிப்பில் இந்த புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பேருந்து தரைத்தளமானது 7 ஆயிரத்து 746 சதுர மீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4 ஆயிரத்து 260 சதுர மீட்டர் பரப்பிலும், நடைமேடை 5 ஆயிரத்து 378 சதுர மீட்டரிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் , இதற்கான திறப்பு விழா எப்போது என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்த நிலையில், தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி 4ம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இப்புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

மேலும், அன்றைய தினம் விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே நடைபெறும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News