கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது

கொடுமுடி அருகே கரும்பு காட்டில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் கைது .

Update: 2021-09-04 16:00 GMT

கொலை செய்யப்பட கோபால்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஆவுடையார்பாறை அருகே உள்ள நாகமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் கோபால் (எ) புதையல் கோபால் (66) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (56) இவர்களுக்கு கண்ணன் (32), சித்ரா தேவி என ஒரு மகன், மகள் உள்ளனர். இதில் கண்ணன் ஈராக் நாட்டில் வசித்து வருகிறார். சித்ராதேவி திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி பக்கத்தில் உள்ள கரும்பு காட்டில் முகம் மற்றும் நெற்றியில் ரத்த காயங்களுடன் கோபால் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

மேலும் எஸ்.பி., சசிமோகன் உத்தரவின் பேரில் பெருந்துறை டிஎஸ்பி., செல்வராஜ் தலைமையில் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி திண்டுக்கல் மாவட்டம் வெம்பாறைப்பட்டு அருகே உள்ள சேடிபட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் சதீஷ்குமார் (22) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் , கோபால் கரூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்த போது சதிஸ்குமாருக்கு பழக்கமானார். கடந்த 2ம் தேதி கோபால் சதீஷ்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு தனது தோட்டத்திற்கு வருமாறு அழைத்ததுள்ளார். அதன்பேரில் சதீஷ்குமார் வந்தபோது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சித்ததால் கோபமடைந்த சதீஷ்குமார் பீர் பாட்டிலால் கோபாலின் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கொலையாளி சதீஷ்குமாரை கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News