மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்: மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை!
மரவள்ளி கிழங்கில், மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் பாதிக்கும் என, ஈரோடு மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கில், மாவு பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அந்தியூர், பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய, 40,000 ரூபாய்க்கு மேல் செலவாகும்.
மரவள்ளி கிழங்கு பயிரிடும்போது தேவையான அளவு தண்ணீர், மாவு பூச்சி உள்ளிட்ட பூச்சி தாக்குதல் இல்லாமல் இருந்தால், 15 டன் அளவுக்கு மரவள்ளி மகசூல் கிடைக்கும். நன்கு அறுவடை நடந்து, வரத்து அதிகரிக்கும்போது சேகோ ஆலைகள் சேர்ந்து கொண்டு, ஒரு டன், 4,500 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
நடப்பாண்டு தண்ணீர் கிடைத்ததால் நன்கு பயிர் வளர்ந்துள்ளது. கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி போன்ற பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஏக்கருக்கு நான்கு முதல் ஐந்து டன் வரை மட்டுமே கிடைக்கும். தோட்டக்கலை துறை அதிகாரிகள் கொரோனாவை காரணம் காட்டி வந்து பார்க்கவில்லை.
விவசாயிகளுக்கு தகுந்த யோசனை தெரிவித்திருந்தால், பாதிப்பை குறைத்திருக்கலாம். எங்களது சங்கம் மூலம் தோட்டக்கலை துறைக்கு தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.எனவே, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், மகசூல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருக்கும் பயிரை காப்பாற்ற, தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.