பவானி அருகே தொழிலாளியை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தொழிலாளியை ஏர்கன் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தொழிலாளியை ஏர்கன் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் கம்பர் வீதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (வயது 47), கார்த்தி (வயது 35). இருவரும் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியில், தனித்தனியே தங்கி, ஒரே மேஸ்திரியிடம் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கார்த்தி வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது வீட்டின் முன் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த கார்த்தி, நான் சொல்லும் மேஸ்திரியிடம் வேலைக்கு வர மாட்டாயா?' என்று தகாத வார்த்தை பேசியதுடன் ஏர்கன் துப்பாக்கியால் செந்தில்குமாரை சுட்டார். இதில், செந்தில்குமாருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்தில்குமாரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்படி கார்த்தியை கைது செய்த அம்மாபேட்டை போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஏர்கன் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.