அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயி கைது

அந்தியூர் அடுத்த பர்கூரில் மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, விவசாயியை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Update: 2023-11-26 03:30 GMT
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானையை படத்தில் காணலாம்.

அந்தியூர் அடுத்த பர்கூரில் மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, விவசாயியை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலைப்பகுதி தம்புரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் புட்டன் (வயது 32). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கேழ்வரகு, மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். மேலும், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று புட்டனின் விவசாய நிலத்திற்குள் புகுந்தது. அப்போது, மின்வேலியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது‌. இதனையடுத்து, நேற்று (சனிக்கிழமை)  காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யானை உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து, வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மின் வேலியில் சிக்கி இறந்த ஆண் யானையின் வயது 50லிருந்து 55க்குள் இருக்கலாம் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இறந்த யானையின் உடலில் இருந்து 150 செ.மீ நீளமுள்ள ஒரு ஜோடி தந்தங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விவசாயி புட்டனை பர்கூர் வனத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News