ஈரோட்டில் 2.16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை
ஈரோடு மாவட்டத்தில் 2.16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 2.16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூபே அட்டை மற்றும் மகளிர் உரிமை கையேடு வழங்கும் நிகழ்ச்சி திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூபே அட்டை மற்றும் மகளிர் உரிமை கையேடுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, இந்தியாவிலேயே முதன் முறையாக பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில், திண்டல் வேளாளர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 5,38,645 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் தற்போது, சுமார் 2,16,439 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பம் வழங்கிய தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொடர்ந்து உரிமைத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்ற அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக வங்கியின் விபரங்கள் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உட்பட 33 நபர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, துணை தலைவர் கஸ்தூரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிச்சாமி, சசிகுமார், மாமன்ற உறுப்பினர்கள், ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.