ஆர்.என்.ரவியை போல இதுவரை தமிழகத்துக்கு ஒரு ஆளுநர் கிடைத்ததில்லை..!

ஆர்.என்.ரவியை போன்று இதுவரை தமிழகத்துக்கு ஆளுநர் கிடைக்கவில்லை என ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2023-09-03 04:15 GMT
கொடுமுடி அருகே ஊஞ்சலூர் வேலம்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன்.

ஆர்.என்.ரவியை போன்று இதுவரை தமிழகத்துக்கு ஆளுநர் கிடைக்கவில்லை என ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள வேலம்பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநில மக்களின் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழியில் பயணம் செய்துள்ளேன்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஓங்கவும், நாடு முன்னேற்றம் அடையவும் அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும். தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை ஆளுநர் கேள்வி கேட்கிறார். இந்த ஆளுநரைப் போன்று இதுவரை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். தவறுகளையும், பொய் வாக்குறுதிகளையும் திசைதிருப்பத் தான் ஆளுநரை திமுக எதிர்க்கிறது. தமிழக முன்னேற்றத்துக்கு ஆளுநரை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை மாற்றி அமைக்க வேண்டும் என திமுக விரும்பினால் உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டுமே தவிர ஆளுநர் மீது குறை சொல்லக்கூடாது. தமிழக அரசு எந்த மாசோதாவை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆளுநர் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாசனத்துக்குட்பட்டு இருந்தால் மட்டுமே ஆளுநர் ஒப்புதல் தருவார்.

இந்திய தண்டனை சட்டம் பெயர் மாற்றத்துக்கு எவ்வளவு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது அதை ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News