ஈரோட்டில் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை தொடக்க விழா
ஈரோட்டில் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோட்டில் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை தொடக்கம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் குறிஞ்சியர் முன்னேற்றப் பேரவை தொடக்க விழா மற்றும் அதன் புதிய கொடி அறிமுக விழா ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இவ்விழாவில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே. சரஸ்வதி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில், பேரவைத் தலைவர் குறிஞ்சி பி.சந்திரசேகரன் தனது உரையில், குறிஞ்சியர் அல்லது குறிஞ்சி வேளாளர் அல்லது குறிஞ்சி வேடர் அல்லது குறிஞ்சி சித்தனார் என்ற பொதுப் பெயரில் குறவர் சமூகத்தின் 27 உட்பிரிவுகளை அரசு ஒன்றிணைத்து, அவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுக்களில் குறவர்களைச் சேர்த்து, அரசுத் துறையில் குறவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநிலத்தில் 10 லட்சம் குறவர்கள் உள்ளனர். அவர்களின் மேம்பாட்டிற்கு பேரவை பாடுபடும், என்றார்.
தொடர்ந்து, இந்திய சுதந்திர போராட்டத்தில் வீரமரணம் அடைந்த தமிழ் குறிஞ்சி நில குறவர் பழங்குடிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் மாவட்ட, மாநில தேசிய அளவிலான அனைத்து விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் பெற்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.