ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை ஜோர்: குடிநீர் விலையில் இளநீர்..!
ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குடிநீர் விலையில் கிடைக்கும் இளநீரை வாங்கி அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குடிநீர் விலையில் கிடைக்கும் இளநீரை வாங்கி அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடைகாலம் என்றால் நமது தாகத்தைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குவது இளநீர் என்றால் அது மிகையல்ல. நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப ரசாயண குளிர்பானங்கள் எத்தனை பெயரில் எவ்வளவு விலையில் குவிக்கப்பட்டு போட்டி கொடுத்தாலும், மருத்துவ ரீதியாகவும், மனதிற் கு இதமாகவும் மக்களை பெரிதும் ஈர்த்து, சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பது இளநீர் மட்டுமே.
கோடைக் காலங்களில் குறிப்பாக நீர்மோர், சர்பத் என குளிர் பானங்கள் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தாலும் மருத்துவ ரீதியாக வயிற்றுப் புண்களை ஆற்றவும், சூட்டைத் தணிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் கூட நேரடியாக அருந்தக் கூடிய பானமாக இளநீர் மட்டுமே உள்ளது. கோடைக் காலத்தின் ஆபத்பாந்தவனாக விளங்கும் இளநீர் குளிர்காலத்திலும் விற்பனையில் சூடு பிடித்து சக்கைப்போடு போடுவது ஈரோட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்மணி. இளநீர் வியாபாரியான இவர், ஈரோடு மாவட்டத்தில் சத்தி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குத்தகைக்கு எடுத்துள்ள தென்னை தோப்பிலிருந்து இளநீர்களை இறக்கி தினமும் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் கனிராவுத்தர் குளம் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே ரூ.10 ரூபாய், ரூ.15 ரூபாய் மற்றும் ரூ.20 என்ற விலைகளில் இளநீரை விற்பனை செய்து வருகிறார்.
உடலுக்கு ஆரோக்கியமான இளநீர் குடிநீர் பாட்டில்கள் விற்பனையாகும் விலைக்கு அதாவது, 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கேயே வாங்கி அருந்தியும், தண்ணீர் பாட்டில்களில் பார்சலாகவும் வாங்கி செல்கின்றனர்.
ஊட்டச் சத்துக்கள்
சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
ஆரோக்ய நன்மைகள்
இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்.
உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம்.
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையைப் போக்குகிறது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.