கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.61 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
கோபி உழவர் சந்தையில், கடந்த மாதத்தில் மட்டும், ரூ.61 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம் கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
கடந்த மாதம், உழவர் சந்தைக்கு 830 விவசாயிகள் சராசரியாக நாளொன்றுக்கு 44 வகையான காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 37 கிலோ காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. இது மொத்தம் ரூ.60 லட்சத்து 91 ஆயிரத்து 246-க்கு விற்பனை ஆனது.காய்கறிகளை 2 லட்சத்து 65 ஆயிரத்து 58 நுகர்வோர்கள் வாங்கிச் சென்று பயனடைந்தனர். உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு மின்னணு தராசு, மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், புதிய விவசாயிகள் தங்கள் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்காக அவர்கள் தங்கள் தோட்டத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் 4 ஸ்டாம்பு சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து, உழவர் சந்தை நிர்வாக அலுவலரிடம் கொடுத்து புதிய அடையாள அட்டை பெற்று காய்கறிகளை விற்கலாம் என, மொடச்சூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.