ஓடத்துறை ஏரி நிரம்பியது; பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கோபி அருகே தொடர் மழையால், ஓடத்துறை ஏரி நிரம்பியது, இதனையொட்டி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.;
பவானி தாலுகா, ஓடத்துறை கிராமத்தில், 400 ஏக்கர் பரப்பளவில், ஓடத்துறை ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம், 175 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நன்செய் சாகுபடி செய்கின்றனர்.
தவிர, 20 கிராமங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மழைநீரும், கீழ்பவானி கசிவுநீருமே குளத்தின் பிரதான நீராதாரம். சில நாட்களாக, கொளப்பலூர், குரவம்பாளையம், நாகதேவன்பாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இதனால் கசிவுநீர் மற்றும் மழைநீர் பெருக்கெடுத்ததால், நேற்று முன்தினம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்நிலையில் ஏரியிலிருந்து இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்து ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் கூறியதாவது:
குளத்தை சுற்றிலும் ஏழு கி.மீ., தொலைவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது. இதை அகற்றி, குளத்தை ஆழப்படுத்தி, கரையை படுப்படுத்தினால், மழைக்காலங்களில் வீணாகும் நீரை, அதிகளவில் சேமிக்க முடியும். ஓடத்துறை பாசன விவசாயிகள் அதிகம் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் உரிய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.