கருப்பன் யானையை பிடிக்கும் திட்டம் ஒத்திவைப்பு; வனத்துறையினர் தகவல்
கருப்பன் யானையை பிடிக்கும் திட்டம் சில நாட்கள் ஒத்திவைக்கபடுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீரை தேடி யானைகள் அவ்வப்போது விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. குறிப்பாக கருப்பன் என்ற ஒற்றை யானை அடிக்கடி வெளியேறி பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகளை வரவழைத்தார்கள். மேலும் மருத்துவர்களுடன் சேர்ந்து வனத்துறை குழுவும் உருவாக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 14-ம் தேதி அதிகாலை இரியபுரத்தில் உள்ள தேவராஜ் என்பவருடைய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. உடனே கும்கி யானைகள் சுற்றி வளைக்க, மருத்துவ குழுவினர் கருப்பன் யானை மீது துப்பாக்கி மூலம் 2 மயக்க ஊசிகளை செலுத்தினார்கள். ஆனால் அரைகுறை மயக்கத்திலேயே கருப்பன் யானை தப்பி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இந்நிலையில், நேற்று (18.01.2023) இரவு ஜீரகள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட கல்மண்டிபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கருப்பன் யானை வந்ததை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (19.01.2023) அதிகாலை வனஉதவி கால்நடை மருத்துவர்களால் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. உடனே அப்பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள ஜீரகள்ளி வனப்பகுதிக்குள் கருப்பன் யானை நுழைந்தது. அங்கிருந்து திகினாரை வழியாக முதியனூர் காட்டுப் பகுதிக்குள் சென்றது.
காட்டிற்குள் வைத்து இரண்டு முறை டாப்-அப் மருந்துகள் செலுத்தப்பட்டும் மயக்கமடையாமல் தப்பிச்சென்றது. இந்த நிகழ்வில் இரண்டு நாட்கள் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் வனஉதவி கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செலுத்தப்பட்ட மருந்துகளானது யானையின் உடலில் இருந்து முழுவதுமாக வெளியேறும் வரை கருப்பன் யானையை பிடிக்கும் திட்டமானது சில நாட்கள் வனத்துறையினரால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருப்பன் யானையினுடைய உணவுப்பழக்க வழக்கங்கள் அதிகமாக விவசாயப்பயிர்களை சார்ந்து இருப்பதால் பொதுவாக கொடுக்கப்படும் மயக்க ஊசி மருந்துகளின் செயல்பாட்டில் சிறிது தொய்வு உள்ளது. எனவே மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மாற்று மருந்துகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மீண்டும் கருப்பன் யானையை பிடிக்க துவங்குவதற்கு முன் விவசாய நிலத்திற்குள் கருப்பன் யானை வருகின்ற பொழுது பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.