ஈரோட்டில் இருந்து பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது: மத்திய இணை அமைச்சர் முருகன்
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.;
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு கொடிசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது, ஈரோடு முதல் திருநெல்வேலி சென்று கொண்டிருந்த இந்த எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்தியா முழுவதுமே ரயில்கள் இணைக்கப்பட வேண்டும், ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், ரயில் சாலைகள் மின் மின்மயமாக்கப்பட வேண்டும் என பாடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் 100 சதவீதம் மின்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் சென்னை ஐசிஎப் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு ரயில்வேக்கு ஒதுக்கி உள்ளனர். 9புதிய வழி தட ரயில்களை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை ரயில் இயக்கப்பட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. மக்களின் பல நாள் கோரிக்கையை அண்ணாமலை ரயில்வே துறை அமைச்சரிடம் தெரிவித்து இந்த ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.
தொடர்ந்து, ரயில் சேவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 11 லட்சம் கோடி அளவிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விமான நிலையங்கள் நான்கு, வந்தே பாரத் ரயில்கள், மேம்பாலங்கள், சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, விவசாயிகளுக்கான ரூபாய் 6000, ஆண்டுதோறும் மானியம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 800 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு 6000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக ஈரோடு தாராபுரம் பழனி மார்க்கமாக புதிய ரயில் வழித்தடம் 75 ரயில்வே ஸ்டேஷன்கள் பன்னாட்டு தரத்திற்கு உயர்ந்து உள்ளன.
அதில் தமிழகத்தில் மட்டும் சென்னை எக்மோர் காட்பாடி கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை கோவை சேலம் போன்ற ரயில் நிலையங்கள் அடங்கும் ரயில் பாதை நூறு சதம் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் ரூபாய் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. ஈரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கோட்டை வரை தற்போது நீடிக்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் சேரன்மாதேவி தென்காசி செல்லவும் அங்கிருந்து ஈரோடு வந்து ஜோலார்பேட்டை சென்னை செல்லவும் இது பெரிதும் வசதியாக இருக்கும். தமிழகத்தில் சென்னை நெல்லை சென்னை பெங்களூர் ஈரோடு பெங்களூர் சென்னை கோவை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது உள்நாட்டிலேயே நமது பெரம்பூர் ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே துறையில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசமாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. நவீன் சக்தி என்ற திட்டத்தின பிரதமர் உள் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்துகிறார். மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பணிக்காக சுமார் 60லிருந்து 70 சதவீதம் நிலம் கையக படுத்தும் பணி நடந்துள்ளது. விரைவில் எலிவேட்டர் காரிடர் எனப்படும் மேம்பாலங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும்.
அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதையும், பிரதமர் கலந்து கொண்டதையும் அனைவரும் வரவேற்கின்றனர். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 500 ஆண்டு மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மீன் வளத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்திராயன் மூலம் ரூபாய் 600 கோடி செலவில் சந்திரனின் தென்துருவத்தை நாம் அடைந்துள்ளோம்.
இது எந்த நாடும் செய்யாதது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. சாதனைகள் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியா கூட்டணி உருப்படாத ஒன்று இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர் என்று சில பத்திரிகைகள் கூறியுள்ளன. தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்து 29 காசு திருப்பி தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கையில், அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப நிதி உதவி செய்யப்படுகிறது எனக் கூறினார்.