ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை, ஆணையர் அதிரடி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை நடந்ததையொட்டி, மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி பாதியில் நிறுத்தப்பட்டது.

Update: 2021-05-06 06:15 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.

இது மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கோவா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

சாதாரண நாட்களில் 800-க்கும் மேற்பட்ட மாடுகள் வரும். ரூ .3 முதல் 4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிமுறை என்பதால் மாட்டுச்சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தொற்று வேகமெடுத்து உள்ளதால் கடந்த வாரம் சந்தை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வாரம் சந்தை வழக்கம் போல் கூடியது. ஆனால் இன்று கூடிய சந்தையில் கொரோனா தாக்கம், இ பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

இதனால் இன்று வியாபாரம் மந்த நிலையே நடந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு நேரடியாக சென்றனர்.

மாட்டு சந்தை நடத்த அனுமதி இல்லை. உடனடியாக சந்தையை கலக்க வேண்டும் இல்லையென்றால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். இதையடுத்து சந்தையில் இருந்து மாடுகள் வேகமாக வெளியேற்றப்பட்டன. அனுமதியில்லாமல் மாடுகளை கொண்டு வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News