இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு: கால அட்டவணை வெளியீடு

இரவு நேர ஊரடங்கு அமல் காரணமாக ஈரோட்டில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் கால அட்டவணையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.;

Update: 2021-04-21 14:19 GMT

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 11  பணிமனைகளில் தினமும் உள்ளுர் வெளியூர் மாவட்டம் என 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பஸ்களின் இயக்க  நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காலை வேளையில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கடைசி நேர பஸ்கள் இயக்கப்படுவது குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு இரவு 8.30  மணி வரை பஸ்கள் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்துக்கு இரவு 7.30 மணி வரையும், கோவைக்கு 7.30 மணி வரையும், திருப்பூருக்கு 8.30 மணி வரையும், பழனிக்கு 7 மணி வரையும், சேலத்துக்கு 8.30 மணி வரையும், மதுரைக்கு மாலை 5 மணிவரையும், திருச்சிக்கு மாலை 6 மணி வரையும், கரூருக்கு 8 மணி வரையும், வெள்ளை கோவிலுக்கு 8.30 மணி வரையும், ராசிபுரத்துக்கு 8 மணி வரையும், நாமக்கல்லுக்கு 8 மணி வரையும் இயக்கப்படும்.

அதேபோல், மேட்டூருக்கு 8.30 மணி வரையும், அந்தியூருக்கு 8.30 மணி வரையும், பவானிக்கு 9.30 மணி  வரையும் பஸ்கள் இயக்கப்படும். பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கால அட்டவணையில் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News