ஈரோடு இடைத்தேர்தல்: நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.;

Update: 2023-03-01 10:30 GMT

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள பலகை.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார் பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் கே. எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த, 27ம் தேதி நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வாக்காளர்கள் சின்னங்களை கண்டுபிடித்து வாக்களிக்க சற்று கூடுதல் நேரமானது. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.

கடந்த 2021 தேர்தலில் 66.23 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் கூடுதலாக 8.56 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு இரவு 11.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதுமாக சென்றடைந்தன. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.நாளை (2ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும், என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

Tags:    

Similar News