நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்... சீமான் ஆரூடம்
விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அவருடன் கூட்டணி வைப்போமா என்பது குறித்து அவருடன் பேசிவிட்டு தான் சொல்வோம்.
நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று சீமான் தெரிவித்தார்
ஈரோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அருந்ததியர் சமூக மக்களை இழிவுபடுத்தியதாக அருந்ததியர் நல அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜராக ஈரோடு ஒருங்கிணைத்த நீதிமன்றத்திற்கு சீமான் வந்தார். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளையும், ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியையும் பாஜக அரசு வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையை கொண்டு சோதனை நடத்துகிறது. தமிழகத்தில் திமுக அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த கால ஆட்சியில் அதிமுக ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா..?. இத்தனை நாட்கள் கழித்து தேர்தல் வரும் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது.?ஜெகத்ரட்ச கன் இப்போது பணக்காரர் ஆனவர் இல்லை. இந்த சோதனையில் நேர்மை இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் சொன்னது உண்மைதான். மத்திய விசாரணை அமைப்புகளின் மூலமாக ரெய்டு நடத்தி எதிர்கட்சிகள் மீதான அச்சுறுத்தலில் பாஜக ஈடுபடுகிறது.
இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சாதாரண பூர்வ குடிகளுக்கு பாதுகாப்பு இல்லை.இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவத்தில் அனைத்து தரப்பு இந்தியர்களும் இடம் பெற முடியும், ஆனால் இலங்கையில் பூர்வ குடிகள் ராணுவத்தில் இடம்பெற முடியாது.
சநாதனம் என்றால் என்ன என்பதற்கான வரையறை இல்லை. வர்ணாசிரம தர்மம் சநாதனம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்வதுதான் சநாதன வர்ணாசிரம கொள்கை. இந்த கோட்பாடுகள் இந்த நூற்றாண்டிலும் அறிவியல் உலகத்திலும் இதனை நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.? எனக்கு யாரும் அடிமை இல்லை. நானும் யாருக்கும் அடிமை இல்லை. இதைத்தான் பெரியாரும் சொல்கிறார்.உலகத்திலேயே உயர்ந்த குடி உலகத்திற்கு உணவளிக்கும் உழவர் குடி மட்டுமே.
சநாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்டதே குற்றம் என சொல்வதில் நியாயம் இல்லை. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அவருடன் கூட்டணி வைப்போமா என்பது குறித்து அவருடன் பேசிவிட்டு தான் சொல்வோம். தற்பொழுது நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். 20 தொகுதிகளில் பெண்களையும் 20 தொகுதிகளில் ஆண்களையும் நிறுத்துகின்றோம் என்றார் சீமான்.