இனி ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் உடனே பறிமுதல்: அக்.13 முதல் அமல்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 13ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது: தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் துறை சார்பில் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்தும், அதனை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் 75 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதுகாப்பாக செல்வதற்காக நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல், மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.அன்று முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.