ஈரோட்டில் ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

நான்கு இடங்களில் தனித்தனியாக ஏலம் நடப்பதால், ஒரு இடத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மறு ஏலத்தில் பங்கேற்க இயலவில்லை.;

Update: 2023-05-13 11:15 GMT

பைல் படம்

ஈரோட்டில், ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மஞ்சள் விளையும் மாவட்டங்களில் ஈரோடு முதன்மையானது. இங்கு விளையும் மஞ்சள் தரமானது என்பதுடன், புவிசார் குறியீடு பெற்றதாகும். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளை விற்பனை செய்ய, ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடைபெறுகிறது.

இந்த, 4 இடங்களிலும், 30 நிமிட இடைவெளியில் தனித்தனியாக ஏலம் நடப்பதால், ஒரு இடத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மறு ஏலத்தில் பங்கேற்க இயலவில்லை. அதுபோல, ஒரு இடத்தில் மஞ்சள் மாதிரியை வைக்கும் விவசாயி, மற்றொரு இடத்துக்கு விரைந்து சென்று மஞ்சள் மாதிரியை வைக்க இயலாமல் போவதால், அந்த இடத்தில் நிர்ணயிக்கப்படும்  நல்ல விலை கிடைப்பதில்லை.  எனவே, கடந்த பல ஆண்டாக, ஒரே இடத்தில் ஏலத்தை நடத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: மஞ்சள் மாவட்ட மான ஈரோட்டில்  அண்மைக் காலமாக அரசு, மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் மெத்தனப் போக்கால் மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மஞ்சளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.

எனவே, விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம், வேளாண் விற்பனை குழு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.  மஞ்சளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அரசு அறிவித்தால், தானாக விலை உயரும். கர்நாடகா மாநிலம் முன்மாதிரியாக செயல்படும்போது, தமிழக அரசு தயங்குவது, மஞ்சள் விவசாயிகளை சோர்வடைய செய்துள்ளது.

அதைவிட முக்கியமாக ஒருங்கிணைந்த மஞ்சள் ஏல மையத்தை ஏற்படுத்த வேண்டும். 4 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொசைட்டி அலுவலகம், குடோன்கள் செயல்பட்டாலும், ஏலத்தை மட்டும் ஒரே இடத்தில் நடத்தினால் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் பங்கேற்கும் வாய்ப்பும் ஏற்படும்.

இந்த முயற்சியை எடுத்தால் அதிகாரிகளுக்கான முக்கியத்துவமும், அவர்களுக்கான வருவாய் குறையும் என்பதால், அக்கரை காட்டுவதில்லை. எனவே, மாநில அரசே நேரடியாக ஒரே இடத்தில் மஞ்சள் ஏலத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், மஞ்சள் ஆராய்ச்சி மையம், மஞ்சள் ஏற்றுமதி மையத்துக்கான அலுவலகத்தை ஈரோட்டில் அமைத்து, மாதம் ஒரு முறையாவது விவசாயிகளை சந்தித்து கலந்தாலோசனை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.


Tags:    

Similar News