ஈரோட்டில் லாட்டரி, மது விற்றதாக 7 பேர் கைது

ஈரோட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2023-10-08 11:45 GMT

பைல் படம்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த முரளி(36), கிருஷ்ணம்பாளையம் சாலையை சேர்ந்த சிவக்குமார்(54) ஆகிய 2 பேரை கைது செய்து, ரூ.8,090 ரொக்கம், 2 ஸ்மார்ட் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மது விற்ற 5 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக ஈரோடு குமலன்குட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் லட்சுமணன்(47), ஈரோடு சம்பத் நகர் பகுதியில் துரைரசாமி(47), பெருந்துறை வாய்க்கால் மேடு பகுியில் பரமசிவம்(59), ஆசனூர் சோதனை சாவடியில் செந்தில்குமார்(28), சத்தியமங்கலம் பகுதியில் சுப்பிரமணியம்(44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை முனியப்பன் நகரை சேர்ந்த செல்வம் மகன் ஜீவா(21). இவர், பிபிஏ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும், ஜீவா அவர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஜீவா கடந்த 5ம் தேதி மாலை வீட்டின் சமையல் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஜீவா மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, ஜீவாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு வீரப்பன் சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா(21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகததால் கடந்த 2ம் தேதி இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசரணை நடத்தி வருகின்றனா்.


Tags:    

Similar News