பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது;
பைல் படம்
ஈரோட்டில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு, கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ஆறுமுகம்,26; கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 2020 நவ., 19 ல், 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, கூச்சலிட்டதால் பயந்துபோன ஆறுமுகம், வீட்டில் இருந்து அச்சிறுமியை வெளியே அனுப்பினார்.
தனது தந்தையிடம் அச்சிறுமி இதுபற்றி கூறியதும், ஈரோடு சூரம்பட்டி போலீஸில் புகார் செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி வழக்கை விசாரித்து, ஆறுமுகத்துக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 3,0000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக, 2 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்காடினார்.