கோபி அருகே வாய்க்காலில் குளித்த துணிக்கடை ஊழியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரக்கன் கோட்டை பாசன வாய்க்காலில் குளித்த துணிக்கடை ஊழியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோபி அருகே அரக்கன் கோட்டை பாசன வாய்க்காலில் குளித்த துணிக்கடை ஊழியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுபட்டி ரோடு பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் நாகேந்திரன் (வயது 26). கோவை கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில், தனது 6 நண்பர்களுடன் சேர்ந்து நாகேந்திரன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரிக்கு நேற்று மதியம் வந்துள்ளார். அப்போது, கொடிவேரி அணையில் இருந்து செல்லும் பாசனத்திற்காக செல்லும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் ஒட்டர்பாளையம் படித்துறையில் நாகேந்திரன் உள்ளிட்ட 7 நபர்களும் குளித்து உள்ளனர்.
படித்துறை அருகே குளித்து கொண்டு இருந்த நாகேந்திரன் சற்று வாய்க்காலின் நடுவே சென்று குளிக்கலாம் என்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்து போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் நாகேந்திரன் தண்ணீரில் அடித்துச் செல்வதை கண்ட அவரது நண்பர்கள் செய்வது அறியாது சத்தமிட்டு அந்த வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு உள்ளனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரை நாகேந்திரனை வாய்க்காலில் தேடியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தேடியதில், படித்துறையில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் நாகேந்திரனை சடலமாக மீட்டனர்.
பின்னர், உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.