அந்தியூரில் தூய்மை பணியாளர்களின் தினசரி ஊதியம் ரூ.448 வழங்க கோரிக்கை
அந்தியூரில் குறைந்தபட்ச கூலி கூட இல்லாமல் குப்பை அள்ளும் தூய்மை காவலர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.;
ஒன்றிய அரசின் வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் கிராம பஞ்சாயத்துக்களில் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினக்கூலி வழங்கப்பட்டு வருகிறது.சட்டம் அனுமதித்த 448 தினக்கூலியை குறைத்து, நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தூய்மை பணியில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அந்தியூர்_ பவானி சாலையில் குவிந்து கிடந்த குப்பையை ஒடுக்கப்பட்ட மக்களான தூய்மை காவலர்கள் சேகரித்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது,தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களுக்கு நாளொன்றுக்கு 120 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
காலையிலிருந்து மாலை வரை ஊராட்சிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சேகரித்து வரும் எங்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பும் இல்லை.ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்படும் 120 ரூபாய் தினக்கூலி எங்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்கவில்லை. கிராமத்து சுத்தமாக வைத்திருக்க எங்களுடன் வேலை வாங்கும் அரசு, எங்களின் வாழ்வாதாரத்தை கணக்கீடு செய்ய வில்லை. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக 120 ரூபாய் தினக்கூலி என்பது, எங்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதாக மட்டுமே உள்ளது. வேலைக்கு சென்றால் கஞ்சி இல்லையென்றால் பட்டினி என்ற நிலையை எங்களின் நிலையாக உள்ளது.எனவே ஒன்றிய அரசு எங்களின் தினக்கூலியை சட்டம் அனுமதித்த 448 ரூபாயை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.