டி.என்.பாளையத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
டி.என்.பாளையம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
டி.என்.பாளையம் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் (தூக்கநாயக்கன்பாளையம்) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கணக்கம்பாளையம் ஊராட்சி பகவதி நகர் பகுதியில் பழங்குடியினர் நலவாரியம் திட்டத்தின் கீழ் ரூ.87.48 லட்சம் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், அதே பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.16.68 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், கணக்கம்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ1.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து, கணக்கம்பாளையம் காமராஜர் தெரு பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், குழந்தைகளின் வருகை, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்து, குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவினையும் ஆய்வு செய்து, உணவினை உட்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வாணிப்புத்தூர், கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தினை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார். மேலும், நஞ்சைதுறையாம்பாளையம் நியாயவிலை கடையினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் நியாயவிலைப் பொருட்களையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் (பொறுப்பு) சிவகாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.