பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால், ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக, மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு செல்கிறது. இதன் காரணமாக, அணை கடந்த மாதம் 22-ந் தேதி தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது.
தொடர்ந்து அணையில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. 41 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால் 17.5 அடி உயரமுடைய கெட்டிசமுத்திரம் ஏரியில், தற்போது 9 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், 16 அடி உயரமுடைய அந்தியூர் பெரிய ஏரியில், தற்போது 6.5 அடிக்கு தண்ணீர் உள்ளது.
மேலும், பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரியும் நிரம்பியுள்ளது. தனது முழு கொள்ளளவான 11.25 அடியை எட்டியுள்ளது. இதே மழை தொடர்ந்து நீடித்தால், அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகள் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.