மதுபோதையில் தகராறு: செங்கல் சூளை தொழிலாளியை கொன்றவர் கைது
அந்தியூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல் சூளை கூலித் தொழிலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்;
மதுபோதையில் கொலை செய்த குமார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோப்பூர் அடுத்துள்ள பாறையூரை சேர்ந்தவர் முருகேசன்.55 வயதான இவர் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 24ம் தேதி இரவு, புதுக்கரடியானூர் சென்னாநாயக்கர் என்பவரது செங்கல் சூளை அருகில், முருகேசனுக்கும், பாறையூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், மது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த குமார், முருகேசனை அடித்துக் கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்து மயங்கிய முருகேசனை, தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிகொண்டு தோப்பூர் பஸ் நிலையத்தில் படுக்க வைத்து விட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலை, தலையில் ரத்தக் காயத்துடன் கிடந்தவரை மீட்ட உறவினர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பெற்ற முருகேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி அந்தியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
உடற்கூறு ஆய்வு முடிவு வெளியான நிலையில், கீழே தள்ளி விட்டதில் தலையில் அடிபட்டு முருகேசன் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.