சொந்த 4 சக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை: காவல்துறை
அந்தியூர் வட்டத்தில், சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் 4 சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில், சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி மற்றும் பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேலு ஆகியோர், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்தியூர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை சந்திப்பு, அண்ணாமடுவு உள்ளிட்ட பல இடங்களில், மோட்டார் வாகன அதிகாரிகள் வாகன தணிக்கை செய்தனர். அந்தியூர் வாடகை கார் ஓட்டுனர்களை சந்தித்த அதிகாரிகள், அனுமதி வாங்கிய நான்கு சக்கர வாகனங்களை மட்டும் வாடகைக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கும் வாகனங்களை வாடகைக்கு இயக்கக் கூடாது என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.