அந்தியூர் எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ளுவதில் தகராறு: டிராக்டர்களுடன் மறியல்

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-24 01:00 GMT

டிராக்டர்களை சாலையில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் எண்ணமங்கலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மண் அள்ள அந்தியூர் வட்டாட்சியர் அனுமதி வழங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே அருகாமையில் உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சி பகுதி விவசாயிகளும் எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ளுவோம் என்றனர். இதனால் இருதரப்பு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று எண்ணமங்கலம் குருநாதபுரம் சுமைதாங்கி அருகே கெட்டிசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களுடன் அந்தியூர்-பர்கூர்  சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, வெள்ளித்திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகளிடம், இதுகுறித்து நாளை (அதாவது இன்று) வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என்றனர். அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அந்தியூர் பர்கூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News