அந்தியூரில் அமமுக கூண்டோடு கலைந்து, அதிமுகவில் இணைந்தது..!
அந்தியூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிற்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிற்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கவுன்சிலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு கே.ஏ.செங்கோட்டையன் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
அதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்து அவர் கூறும்போது, அந்தியூரில் அமமுக கூண்டோடு கலைந்து 90 சதவீதம் பேர் அதிமுகவில் இணைத்து கொண்டு உள்ளனர். காரணம் அதிமுக ஒரு வலுவான இயக்கம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அண்ணா திமுகவில் ஆர்ப்பரித்து பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிமுக கரங்களை வலுப்படுத்த இது போன்ற இளைஞர்கள் அதிமுகவில் இணைந்து அதிமுக ஒரே அணியாக தான் இருக்கிறதே தவிர பிரியவில்லை என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். கூட்டணியை பொறுத்தவரைக்கும் பொதுச்செயலாளர் தலைமையில் வலுவான கூட்டணியாக அமையும். நாடாளுமன்ற தேர்தல் ஒரு திருப்பு முனையாக அமையும். அதே போல 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும் என தெரிவித்தார்.
சபரிமலைக்கு மாலை அணிந்த பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு வரும் பொழுது பொட்டு, வைத்து வந்தால் பள்ளிக்கு உள்ளே அனுமதி அளிக்கப்படாதது குறித்து கேள்விக்கு, இது போன்ற நிலைகள் எங்கள் கவனத்திற்கு வந்தால் அதை பள்ளி கல்வித்துறைக்கு எடுத்து சொல்லி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக அறிக்கை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். இந்நிகழ்ச்சியின் போது, கோபி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வக்கீல் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், ஹரி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.