அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை: ஈரோடு ஆட்சியர் தகவல்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-21 03:15 GMT

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமை காலத்திலும் பொருள் வறுமை, தமிழ் தொண்டர் பெருமக்களை தாக்காவண்ணம் மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்து 500-ம், மருத்துவப்படி ரூ.500-ம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.அவ்வகையில், விண்ணப்பிக்க விரும்புவோர் 2023ம் ஆண்டு, ஜன., ஒன்றாம் தேதியன்று, 58 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விபரக்குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரை சான்று 2, தமிழறிஞர்களிடமிருந்து பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்று கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

Tags:    

Similar News